Coffee day பெண்ணின் கலக்கல் சாதனை

375
Advertisement

பிரபல Coffee day நிறுவனத்துக்கு 7,200 கோடி கடன் இருந்ததால், அதன் நிறுவனர் 2019 ஆம் ஆண்டில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அதன்பிறகு, அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த அவரது மனைவி ஒரே ஆண்டில் கடனைப் பாதியாகக் குறைத்து அசத்தியுள்ளார்.

1996 ஆம் ஆண்டில் காபி டே என்னும் பெயரில் சிறிய சிற்றுண்டிச் சாலையைத் தொடங்கி, காபிக் கடை வணிகத்தை மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக உயர்த்தி, ஏனைய தொழில் அதிபர்களை மலைக்க வைத்தவர் வி.ஜே. சித்தார்த்தா ஹெக்டே.

இவரது காபி டே நிறுவனத்துக்குத் தினமும் வந்துசெல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகம். காபி டே நிறுவனம் சிறிய தொழில்முனைவோர்களின் சந்திப்புக்கூடமாக, தொழில் மன்றமாகத் திகழ்ந்தது.
பணியாளர்களின் கனிவானப் பேச்சும் இனிமையான உபசரிப்பும் காபி டே நிறுவனத்தை மட்டுமல்லாமல், சிறிய தொழில்முனைவோர் பலரையும் உயர்த்தியது.
ஆலமரம்போல் 1600க்கும் அதிகமான கிளைகளைப் பரப்பி, 3000 ஏக்கர் காபித் தோட்டங்களை வாங்கி, இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் சித்தார்த்.

ஆனால், பரிதாபமாக தன் 60 வயதில் கடன்தொல்லை காரணமாக வாழ்வை முடித்துக்கொண்டார் சித்தார்த். அவரது முகத்தை இறுதியாகப் பார்க்க அழைத்து வரப்பட்டார் மனைவி மாளவிகா.

அப்போது கணவரின் முகத்தைப் பார்க்க மன உறுதியில்லாமல் சாதாரணப் பெண்ணாக அழுதுகொண்டே இருந்தார். அதன்பின் வீட்டோடு முடங்கியிருந்தார் மாளவிகா.

துவண்டு போயிருந்த மாளவிகாவுக்கு கணவர் ஆசையாய் ஆசையாய் தொடங்கிய கனவு நிறுவனம் கண்முன்னே வந்துபோக, வீறுகொண்டு எழுந்தார். 2020 ஆம் ஆண்டில், காபி டே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

நட்டத்தில் இயங்கிய கிளைகளை மூடிவிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்தக் கிளைகளைத் தொடங்கினார். காபி டே நிறுவனத்தில் காபித் தூள், காபி உபகரணங்கள் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கினார்.

அதன் பலன்…ஓர் ஆண்டிலேயே கடனிலிருந்து மீளத் தொடங்கியது காபி டே நிறுவனம். சிறிது சிறிதாகக் கடனை அடைக்கத் தொடங்கினார். வங்கிகளிடம் அவகாசம் கேட்டார். கணவர் விட்டுச்சென்ற கடனில் பாதித் தொகையை அடைத்து மீண்டும் சிகரத்தை எட்டத் தொடங்கிவிட்டார். சரிந்துகிடக்கும் சாம்ராஜ்யத்தையும் நிமிர்த்தத் தொடங்கிவிட்டார் மாளவிகா.

யார் இந்த மாளவிகா?

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மகள்தான் இந்த மாளவிகா.
தன்னம்பிக்கைக்கு இனி மாளவிகாவை உதாரணம் காட்டலாம்.