மும்பை பாந்திரா டெர்மினலில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 12925) நேற்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் போரிவிலியை கடந்து சென்ற போது ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தனியாக கழன்று சென்றன.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு கழன்று சென்ற பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் கழித்து எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டது. பின்னர் மதியம் 2.10 மணியளவில், ரெயில் வாபி அருகே சஞ்சன் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அந்த 2 பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன. இதனால் ரயில் மீண்டும் நிறுத்தப்பட்டு பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2 முறை ரெயில் பெட்டிகள் பிரிந்ததால் சுமார் 3 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயில் பெட்டிகள் 2 முறை கழன்றதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.