குளோனிங் தென்னை மரம்

386
Advertisement

குளோனிங் தென்னை மரத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் வியக்கவைத்துள்ளனர்.

பெல்ஜியம் விஞ்ஞானிகள்தாம் இந்த வியத்தகு சாதனைக்குச் சொந்தக்காரர்கள்.

ஏற்கெனவே குளோனிங் முறையில் ஆடு, மாடு, பன்றி உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்களிலும் குளோனிங் முறையைக் கொண்டுவர விஞ்ஞானிகள் விரும்பினர். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

குளோனிங் முறையில் மனிதர்களை உருவாக்கினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடும் என்று கருதி எதிர்ப்பு ஏற்பட்டதால் இம்முறை கைவிடப்பட்டது.
ஆனாலும், விஞ்ஞானிகள் பிற உயிரினங்களில் குளோனிங் முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், வேளாண்மைத் துறையில் புதுமையான சாதனையைக் கொண்டுவர விரும்பிய பெல்ஜியம் நாட்டு விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் தென்னை மரத்தை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானி பார்ட் பனிஸ் தலைமையில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்களின் சீரிய முயற்சிக்குத் தற்போது சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது.
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள தென்னை மரம் பல்வேறு நோய்களைத் தாக்குப் பிடிக்கக்கூடியதாகவும், குறுகிய காலத்திலேயே அமோக விளைச்சல் தருவதாகவும் இதற்கான முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

குளோனிங் தென்னை மரம் வளர்ப்பதற்கு உலகம் ஒப்புக்கொண்டால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு சிறந்த வரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.