உலகப் பெருங்கடல்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் சீனா, இப்போது அமெரிக்காவிற்கே சவால் விடும் வகையில் ஒரு மாபெரும் ராணுவ ரகசியத்தை உடைத்துள்ளது. சீனக் கடற்படையின் 77-வது ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட “இன்டூ தி டீப்” (Into The Deep) என்ற ஆவணப்படம், சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கடற்கரைப் பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சீனா, இப்போது ஆழ்கடல் போருக்குத் தயாராகி வருவதை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, சீனா தற்போது ரகசியமாகத் தயாரித்து வரும் அதன் நான்காவது ஏர்கிராஃப்ட் கேரியர் கப்பல், அணுசக்தியால் இயங்கப்போகிறது என்ற தகவல் உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது.
சீனாவின் இந்த ரகசியத் திட்டம் “ஹெ ஜியான்” (He Jian) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சீன மொழியில் “ஹெ” என்றால் அணுசக்தி என்றும், “ஜியான்” என்றால் கப்பல் என்றும் பொருள்படும். ஏற்கனவே லியோனிங், ஷான்டாங் மற்றும் புஜியான் ஆகிய மூன்று பிரம்மாண்ட கப்பல்களை சீனா வைத்துள்ள போதிலும், அவை அனைத்தும் எரிபொருளால் இயங்குபவை. ஆனால், அணுசக்தியால் இயங்கும் இந்த புதிய கப்பல், பல மாதங்கள் இடைவிடாமல் கடலில் பயணம் செய்யும் வல்லமை கொண்டது.
டாலியன் (Dalian) துறைமுகத்தில் இருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த ‘ஜெரால்ட் ஆர் ஃபோர்டு’ (Gerald R. Ford) ரகக் கப்பலுக்கு இணையாக இந்த கப்பல் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்துகின்றன. தற்போது உலகிலேயே அதிகப்படியான போர்க்கப்பல்களைக் கொண்ட நாடாகச் சீனா உருவெடுத்துள்ளது. அமெரிக்காவிடம் 219 போர்க்கப்பல்கள் மட்டுமே உள்ள நிலையில், சீனாவிடம் 234 கப்பல்கள் உள்ளன.
இருப்பினும், அமெரிக்கா 11 அணுசக்தி ஏர்கிராஃப்ட் கேரியர்களுடன் கடலில் ராஜாவாக வலம் வருகிறது. அந்த இடத்தைப் பிடிக்கவே சீனா இப்போது தனது முழு பலத்தையும் காட்டி வருகிறது. குறிப்பாக, ஈரானுடன் நிலவும் போர்ச் சூழலைப் பயன்படுத்தி, சீனா தனது கடற்படை விரிவவாக்கத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் குவாடர் மற்றும் இலங்கையின் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களைச் சீனா தனது ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டு வருவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யா ஆகிய இரண்டு ஏர்கிராஃப்ட் கேரியர்களுடன் இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. ஆனால், சீனாவின் இந்த அணுசக்தி கப்பல் வருகையானது ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சமநிலையைத் தலைகீழாக மாற்றக்கூடும். மின்காந்த ஏவுகணைத் தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி இன்ஜின்கள் எனச் சீனாவின் இந்த அசுர வளர்ச்சி, வரும் காலங்களில் நடுக்கடலில் ஒரு மிகப்பெரிய அதிகாரப் போட்டியை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. வல்லரசு நாடுகளுக்கிடையேயான இந்த ராணுவப் போட்டி உலகப்போருக்கான அச்சத்தை இன்னும் அதிகரித்தே வருகிறது.
