சீனாவின் உலகளாவிய ஏகபோகம் மெல்ல மாறிவரும் நேரத்தில், இந்தியாவுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், அரிய பூமி கனிமங்கள் எனப்படும் Rare Earth Minerals என சொல்லப்படும் அறிய வகை கனிமங்கள் மிகப்பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை சாதாரணமான பொருட்கள் அல்ல. இந்த அரிய பூமி தாதுக்கள் ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், லேசர் டெக்னாலஜி, பாதுகாப்பு உபகரணங்கள், ஏவுகணைகள், சூரிய சக்தி பேனல்கள் வரை — நவீன உலகின் பல முக்கியமான தொழில்நுட்பங்களுக்கு இவை அடிப்படையாக இருக்கின்றன.
இப்போதுவரை, இந்த துறையில் சீனா தான் உலக அளவில் 90% வரையிலான உற்பத்தியை மேற்கொண்டு வந்தது. ஆனால் ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள Bhati Kheda(பாட்டி கேடா) கிராமத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையமான GSI மற்றும் அணு கனிம இயக்குநரகமான AMD-யும் இணைந்து செய்த ஆய்வில், இவை மிகுந்த செறிவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கண்டுபிடிப்பு, இந்தியாவின் தன்னிறைவு கனவு நிஜமாகும் பாதையில் மிகப் பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. சுமார் ₹10 கோடி மதிப்பிலான சுரங்க ஏலங்கள் விரைவில் நடைபெறவிருக்கின்றன, இது தனியார் மற்றும் பொது நிறுவனங்களிடமிருந்து ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக இருக்கின்றது.
பாட்டி கேடா பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதிக்கான பிரச்னை இல்லாததால், நேரடி சுரங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக, பாஸ்ட்னாசைட் (Bastnasite),பைரோக்ளோர்(Pyrochlore),செனோடைம் (Xenotime) போன்ற அரிய தாதுக்கள் இங்கு அதிக அளவில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 6.9 மில்லியன் டன் அரிய பூமி கனிம இருப்புகள் உள்ளன. ஆனால் தற்போதைய உற்பத்தி உலக அளவில் வெறும் 1% மட்டுமே இருக்கிறது.இப்போது இதை மாற்றவே, 2025-இல் இந்திய அரசு NCMM எனப்படும் முக்கியமான கனிம பணி திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் — புதிய ஆய்வுகள், சுரங்கம், செயலாக்கம், மறுசுழற்சி உள்ளிட்ட அனைத்திலும் இந்தியாவை முன்னோடியாக மாற்றுவது. இதற்காக ₹1,000 கோடி அளவிலான PLI Scheme எனப்படும் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகள், வளர்ச்சி திட்டங்கள், மற்றும் அண்மைக் கண்டுபிடிப்புகளோடு சேர்ந்து, இந்தியா உலக அரிய பூமி துறையில் ஒரு சக்திவாய்ந்த முன்னணி நாடாக உருவெடுக்கத் தயாராகியுள்ளது.இப்போது இந்தியா சீனாவைச் சார்ந்திருக்கும் காலம் ஒரு ஒரு படியாக மாறிக்கொண்டிருக்கிறது.