2020ஆம் ஆண்டு சீனா Change 5 மூலமாக முதல்முறையாக நிலாவின் மண் மாதிரிகளை எடுத்து வந்தது.
இதையடுத்து நிலா தொடர்பான ஆய்வுகளில் தீவிரம் காட்டி வரும் சீனா, தற்போது நிலாவில் குடியிருப்புகள் அமைக்கும் அளவிற்கு அடுத்தகட்ட முன்னெடுப்புகளில் ஆர்வம் காட்டி வருகிறது.
Change 8 Mission என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், நிலாவில் கட்டடம் கட்ட 3D தொழில்நுட்பத்தை உபயோகிப்பது தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருகிறது. மேலும், நிலாவில் உள்ள மண்ணை பயன்படுத்தி செங்கல் செய்ய ரோபோக்களை நிலாவிற்கு அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த செங்கல் தயாரிக்கும் பணிகள் 2028க்குள் சாத்தியமாக்கப்படும் என Chinese Academy of Engineeringஐ சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலாவில் குடியிருப்புகள் அமைப்பது குறித்த ஆராய்ச்சியில், அடுத்த ஐந்து வருடங்களில் சீனா அபார வளர்ச்சி அடைந்திருக்கும் என கூறும் ஆராய்ச்சியாளர்கள், 2030ஆம் ஆண்டுக்குள் நிலாவிற்கு விண்வெளி வீரரை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சீனாவின் நிலவை நோக்கிய படையெடுப்பு உலக அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் இந்நிகழ்விற்கு எத்தகைய பதிலடி அளிக்க போகிறதென அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நாசா நான்கு விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.