Tuesday, December 9, 2025

இந்தியா மீது புகார் அளித்த சீனா! இது தான் அந்த காரணம்! அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்தியா மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வழங்கும் மானிய திட்டத்தை பற்றி உலக வர்த்தக அமைப்பான WTO-வில் சீனா புகார் அளித்துள்ளது. இந்திய மத்திய அரசு, உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் இறக்குமதி குறைப்பு மானியங்களை வழங்கி, உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

சீன நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியாக WTO-வில் புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன அதிகாரிகள், ‘இந்திய அரசு அறிவித்த இறக்குமதி குறைப்பு மானிய திட்டம், பலதரப்பு வர்த்தக விதிகளின் கீழ் தடையாகும். இது உள்நாட்டு நிறுவனங்களுக்கு நன்மை தரும் வகையில் செயல்படுவதால் சீன நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று கூறியுள்ளனர்.

சீனா இதேபோன்ற புகார்களை துருக்கி, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எதிராகவும் WTO-வில் சமர்ப்பித்துள்ளது. இந்தியா தொடர்பாகவும் ஆலோசனை நடத்த WTO அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய வர்த்தகச் செயலர் ராஜேஷ் அகர்வால், ‘சீனா சமர்ப்பித்த புகாரை மத்திய அமைச்சகம் முழுமையாக ஆய்வு செய்யும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி ரூ. 1.46 லட்சம் கோடியாக இருந்தது. அதே நேரத்தில், இறக்குமதி மதிப்பு 11.52 சதவீதம் உயர்ந்து ரூ. 9.99 லட்சம் கோடியாகும். இதனால் 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை ரூ. 8.73 லட்சம் கோடியாக அதிகரித்தது.

இந்த மானிய நடவடிக்கை மற்றும் சீனாவின் புகார், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

Related News

Latest News