Tuesday, April 22, 2025

அதிரடியாக முட்டிக்கொள்ளும் சீனா மற்றும் அமெரிக்கா! இடையே இந்தியாவிற்கு பறந்து வந்த ‘jackpot’ வாய்ப்பு!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகப் போர் பற்றி நம்மளில் பலருக்கும் தெரியும். ஆனால், அந்த வர்த்தகப் போர்… இந்தியாவுக்கு சத்தமின்றி செம்ம லாபம் கொண்டு வந்திருக்கிறது என்பதைப் பற்றி யாரும் பெரிதாக பேசவே இல்லை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இம்மாதம் தொடக்கத்தில் பல்வேறு நாடுகளுக்கு எதிராக ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது, ஒரு நாட்டில் அமெரிக்க பொருட்களுக்கு எப்படி வரி விதிக்கப்படுகிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் அந்த நாட்டின் பொருட்களுக்கு விதிக்கும் என்றதுதான் அந்த கொள்கை.
ஆனால், ஒரே வாரத்துக்குள் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார். அதே நேரத்தில், சீனாவுக்கான இறக்குமதி வரியை மட்டும் அதிகரிப்பதாகக் கூறினார்.
இதனால் அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் புதுக்கட்டத்திற்கு சென்றது. சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 245% வரி விதித்தது. பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 100%க்கும் அதிகமான வரி விதித்தது.
இந்த வரிகள் போடப்பட்டதன் காரணமாக, முக்கியமான தொழில் துறைகள் பெரிதும் பாதிக்கபட்டன. அதில் ஒன்று தான் விமானத் தொழில்.
உலகில் முக்கியமான இரண்டு விமான உற்பத்தியாளர்கள் தான் உள்ளனர் – அமெரிக்காவின் Boeing மற்றும் ஐரோப்பாவின் Airbus.
இந்த வர்த்தகப் போரால், சீன அரசாங்கம் – “போயிங் விமானங்களை வாங்கவே கூடாது” என தன் நிறுவனங்களுக்கு நேரடி உத்தரவு விட்டது.
இதனால் ஏற்கனவே சீனாவுக்காக தயாராகியிருந்த பத்து Boeing 737 MAX விமானங்கள் கேன்சல் செய்யப்பட்டன. சில விமானங்கள் சீனாவுக்கு வந்திருந்தபோது நேரடியாக திருப்பி அனுப்பப்படவும் செய்தன.
இதைத்தான் பெரும் வாய்ப்பாகப் பார்த்தது நம்ம ஏர் இந்தியா. இப்போது டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்திற்கு உடனடியாக புதிய விமானங்கள் தேவை.
ஏர் இந்தியா ஏற்கனவே 2023இல் 140 புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை 2026ம் ஆண்டுக்குத்தான் கிடைக்கப்போகிறது. அதுவரை காத்திருக்க முடியாது. ஏன் தெரியுமா?
இந்திய விமான சந்தையில் தற்போது ஏர் இந்தியா vs இண்டிகோ என்ற போட்டி கடுமையாகவே சென்று கொண்டிருக்கிறது. இண்டிகோ முன்னிலை வகிக்கிறது. அதை சமாளிக்க ஏர் இந்தியாவுக்கு அதிகபட்ச அளவில் விமானங்கள் தேவைப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவால் நிராகரிக்கப்பட்ட போயிங் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்காக நேரடியாக போயிங் நிறுவனத்தை அணுகியுள்ளது.
இதில் இன்னும் ஒன்று – இது முதல் முறை இல்லை!
முந்தைய காலத்தில், சீன நிறுவனங்கள் ‘வேண்டாம்’ என சொன்ன 41 போயிங் 737 MAX விமானங்களை ஏர் இந்தியா ஏற்கனவே வாங்கியிருந்தது! அதுவே இப்போது தொடர்கிறது.
மேலும், இந்த 10 விமானங்கள் மட்டுமல்ல – சீனாவுக்காக தயாராகியிருந்த மற்ற ஜெட் விமானங்களையும் வாங்க, ஏர் இந்தியா முன்வந்துள்ளது. அதுமட்டுமல்ல, சீனாவுக்காக ஒதுக்கப்பட்ட உற்பத்தி ஸ்லாட்களையும் கோர திட்டமிட்டுள்ளது.
இந்த பயணத்தில் ஏர் இந்தியா மட்டும் இல்ல. மலேசியா நாட்டின் மலேசியன் ஏர்லைன்ஸும் போயிங்கை அணுகியுள்ளது. எனவே, இந்த விமானங்களை யார் வாங்கப் போகிறார்கள் என்பதை காலமே சொல்ல வேண்டும்!
ஆனால்… சிக்கலும் இருக்கு!
இந்த விமானங்கள் சீன நிறுவனங்களின் தேவையை பொருத்து டிசைன் செய்யப்பட்டவை. அதாவது, கேபின் அமைப்பு, சீட் எண்ணிக்கை, வசதிகள் எல்லாமே சீன பயணிகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய சந்தைக்கு சரியாக பொருந்தாத நேரம் வரும்.
ஆனால் அதற்கும் தீர்வு தயாராகவே இருக்கு. இந்த விமானங்களை பெங்களூரிலேயே திருத்தி, ரீபெயிண்ட் செய்து, Air India Express எனும் லோ-காஸ்ட் பிராண்டில் இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இண்டிகோ தற்போது குறைந்த விலையில் டிக்கெட் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. அதற்கே எதிராக போட்டியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாஞ்ச் செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் உலக அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருந்தாலும், நம்ம இந்தியாவுக்கு இது ஒரு “ஸ்மார்ட் வாய்ப்பு” ஆக மாறி இருக்கிறது.
போயிங் விமானங்கள் டிலே ஆனாலும், சீனா இல்லாத இடத்தை இந்தியா நிரப்பி கொள்கிறது!

Latest news