மராட்டிய மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியில் பூஜா பவார் (22) என்பவர் வசித்து வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில், தனது மனைவியும் 11 மாத குழந்தையும் காணாமல் போனதாக பூஜா பவாரின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதலில், ஏப்ரல் 5ஆம் தேதி ஜம்புட் கிராமத்தில் பூஜா பவார் மட்டும் தனியாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் குழந்தை குறித்து விசாரித்தபோது, “குழந்தை தவறி கீழே விழுந்து இறந்துவிட்டது. பயந்ததால் உடலை பையில் வைத்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். அவரது பதில்களில் சந்தேகம் இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, பூஜா பவார் தனது வாக்குமூலத்தில், “என் கணவரை விட்டுவிட்டு வேறு திருமணம் செய்ய நினைத்தேன். அதற்கு என் 11 மாத குழந்தை தடையாக இருந்தது. குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருந்ததால் கோபத்தில் அதன் தலையை துணி துவைக்கும் கல்லில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை ஒரு பையில் வைத்து விவசாய கிணற்றில் வீசியேன்” என்று ஒப்புக்கொண்டார்.
இதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் காட்டிய கிணற்றில் இருந்து குழந்தையின் உடலை அழுகிய நிலையில் மீட்டனர். இந்த சம்பவத்தையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பூஜா பவாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
