தமிழக முதலமைச்சர் விஜய், ஒருநாள் பயணமாக இன்று ஆந்திரப் பிரதேசம் செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின்போது, விஜயவாடாவில் உள்ள கனக துர்கா அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவதுடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்தப் பயணத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோரும் உடன் செல்ல உள்ளனர்.
திட்டமிட்டபடி, பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய், மாலை 4 மணியளவில் விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்தைச் சென்றடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கனக துர்கா அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறார்.
தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற உள்ள சந்திப்பில், இரு மாநில உறவுகள் மற்றும் கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, புன்னமி கடற்கரைப் பகுதியில் நடைபெறும் உற்சவ நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்கிறார். பின்னர் இரவு 9 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டு, இரவு 10 மணியளவில் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பாசன வசதியும் குடிநீர் ஆதாரமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
