தமிழகத்தில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ‘ராஜ் பவன்’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, சென்னையில் உள்ள ராஜ் பவன் பெயரை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ராஜ்பவன்கள் இனி ‘லோக் பவன்’ எனவும், யூனியன் பிரதேசங்களில் உள்ள ராஜ் நிவாஸ் இனி ‘லோக் நிவாஸ்’ எனவும் மாற்றப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது :
“பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
