நாம் கட்சி தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீதித்துறை, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் போலீசில் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
