கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி

443
Advertisement

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்குப் பதிலாக ஒருவருக்கு நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட விஷயம் பரபரப்பாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 45 வயதான இவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவரால் சரியாக எழுந்துநிற்கக்கூட முடியவில்லை. எனவே, தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி அறிந்துகொள்வதற்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றிருக்கிறார்.

அங்கிருந்த மருத்துவ அதிகாரியிடம் தனக்கு ஆபரேஷன் நடந்ததைப் பற்றிக்கூறி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். மருத்துவ அதிகாரியும் ஆம் என்று கூறியுள்ளார்.

அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் ராஜ்குமாரை அங்குள்ள ஓர் அறையில் உட்காரச் சொல்லியுள்ளார்..

ராஜ்குமாரோ அது ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும் அறை என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த செவிலியர்கள் ராஜ்குமார் கையில் இருந்த பேப்பரைப் பார்க்காமல் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

செவிலியர்களிடம் தனக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பெயரைக் கேட்டுள்ளார். அப்போதுதான் ராஜ்குமாருக்கு செவிலியர்கள் கவனக்குறைவால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய விவரத்தைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மேலதிகாரிகளிடம் புகார் செய்தார்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஒரு டாக்டரும் நர்சும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ராஜ்குமாருக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது-

ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.