அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதிப்பதாக அறிவித்தார். ஆனாலும், அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது. இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றன. இருப்பினும், உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.
இந்நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்ந்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த அபராத வரி வரும் 27-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மட்டுமல்லாமல், வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்தியா இதனை சற்றும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
இந்த நிலையில் வரும் 25-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.
புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய – அமெரிக்க வர்த்தக உறவை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதாகவே பார்க்கப்படுகிறது.