Friday, January 30, 2026

பெங்களூருவில் தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூருவில், ரிச்மண்ட் சர்க்கிள் அருகே கான்ஃபிடன்ட் குரூப் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்திற்குள், அந்த நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான சி.ஜே. ராய் (57), இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சி.ஜே. ராய் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். மேலும் தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

முன்னதாக ராயின் அலுவலகத்தில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியதுடன், அவரிடம் விசாரணையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ராய் தனது அலுவலகத்தில் தனியாக இருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

எனினும், முழுமையான விசாரணை முடிந்த பின்னரே தற்கொலைக்கான காரணம் தெளிவாக தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News