Sunday, July 27, 2025

கம்பீருக்கு பாடம் புகட்டிய Bumrah : வெளிநாட்டு ஊடகங்கள் புகழாரம்

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி தற்போது லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி பர்ஸ்ட் இன்னிங்சில், 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பதிலுக்கு இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களை எடுத்தது. தற்போது இந்தியா 2வது இன்னிங்சை ஆடிவருகிறது. ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், சாய் சுதர்சன் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். ஓபனர் கேஎல் ராகுல், கேப்டன் கில் இருவரும் களத்தில் இருக்கின்றனர்.

இந்திய தரப்பில் பும்ரா மட்டுமே அதிரடியாக பந்துவீசி, விக்கெட் வேட்டை நடத்தினார். 25 ஓவர்களை வீசிய பும்ரா 83 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஜெய்ஸ்வால், ஜடேஜா இருவரும் பும்ராவின் பந்தில் கேட்ச்களை தவறவிட்டனர். என்றாலும் அதனால் சற்றும் மனம் தளராமல் விக்கெட் எடுத்து தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார்.

பும்ரா இல்லையெனில் இங்கிலாந்து எளிதாக முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும். இதைப்பார்த்த வெளிநாட்டு ஊடகங்களும் அவரை வெகுவாக புகழ்ந்துள்ளன. BBC பும்ரா குறித்து, ” பும்ரா ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர்,” என்று பாராட்டி இருக்கிறது.

Daily Mail பத்திரிக்கை, ” பும்ரா ஒரு கிளாடியேட்டர் போல அரங்கிற்குள் நுழைந்தார். அவரின் திறமைக்கு முன்னால் நாங்கள் அசையாமல் நின்றோம்,” என புகழாரம் சூட்டியுள்ளது. The Telegraph பத்திரிக்கை, ” Red Ball கிரிக்கெட்டில் பும்ரா ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்,” என்று புகழ்ந்து தள்ளியுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ” பும்ரா இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அவரின் இடத்தை நிரப்பக்கூடிய பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர்,” என்று பேட்டி அளித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது கம்பீரின் பேட்டி அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள், ” பும்ரா இல்லன்னா தலையில துண்ட போட்டுக்கிட்டு, இந்தியாவுக்கு திரும்ப வேண்டியது தான். தில்லு இருந்தா பும்ராவை மட்டம் தட்டி இப்போ பேசுங்க பாப்போம்.

ரோஹித், விராட் ரெண்டு பேரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு போக நீங்க தான் காரணம். உங்களால தான் இந்திய அணி நாளுக்குநாள் மோசமாகிட்டு இருக்கு. தயவுசெஞ்சு சீக்கிரம் ராஜினாமா பண்ணிட்டு போங்க,” இவ்வாறு விதவிதமாக கம்பீரை விளாசி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News