தீப்பிடித்த கட்டடத்தில் சிக்கிக்கொண்ட முதியவரை 3 நண்பர்கள் பாதுகாப்பாக மீட்டு, கருணைக்கும் மனித நேயத்தும் ஈடு இணையில்லை என்பதை நிரூபித்துள்ளனர்..
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள ஒரு குடியிருப்பின் 3 ஆவது மாடி திடீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். ஆனால், முதியவர் ஒருவர் வெளியேற முடியாமல் தவித்தபடி பால்கனி அருகே நின்றுகொண்டிருந்தார்.
யாராவது தன்னைக் காப்பாற்றிவிடமாட்டார்களா என்று முதியவர் பரிதவித்துக்கொண்டிருந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் உலவிக்கொண்டிருந்த 3 ரஷ்ய நண்பர்கள் அந்த முதியவரைப் பார்த்தனர்.
உடனே நண்பர்கள் மூவரும் ஓடிக்சென்று முதியவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
அருகிலுள்ள குடியிருப்பு வழியாக, விபத்தில் சிக்கியுள்ள முதியவர் இருந்த வீட்டை அடைந்தனர். அதில் ஒருவர், தங்கள் அருகே வருமாறு முதியவரை அழைத்தார். அவரோ, வராமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.
அருகே சென்று பார்த்தபோதுதான் அந்த முதியவர் மாற்றுத்திறனாளி என்பதைத் தெரிந்துகொண்டார். சட்டென்று முதியவர் இருந்த பால்கனிக்குள் குதித்த அந்த வீரர், அவரைத் தூக்கிக்கொண்டு, அருகிலுள்ள குடியிருப்புக்குள் பாதுகாப்பாகக் கொண்டுவந்துவிட்டார்.
தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், முதியவரைக் காப்பாற்றிய நண்பர்கள் 3 பேரையும் வலைத்தளவாசிகள் பாராட்டிக் குளிர்வித்துவிட்டனர்.
2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.