கடந்த ஏப்ரல் 20ம் தேதி மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை தோற்றாலும் கூட, 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரேவின் ஆட்டம், ரசிகர்களின் புண்பட்ட மனதை, மயில் இறகால் வருடியது போல இருந்தது. ஆயுஷ் வெறும் 15 பந்தில் 32 ரன்களை அடித்து, மும்பை பவுலர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்களும், ஆயுஷின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினர். தோனியும் தோல்விக்கு பிறகு, மாத்ரேவின் அதிரடி தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். ரசிகர்கள், விமர்சகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று அத்தனை பேருமே ஆயுஷை பாராட்டித் தள்ளுகின்றனர்.
இதற்கு நேர்மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர், ஸ்டீபன் பிளெமிங் ஆயுஷ் மாத்ரேவை கண்டித்து இருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டியில் பிளெமிங், ” இந்தியாவின் இளம்வீரர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
களத்தின் சூழ்நிலையை கவனிக்காமல் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுகின்றனர். இது நல்ல அணுகுமுறை கிடையாது. அடித்து ஆட இதொன்றும் பேஸ்பால் இல்லை,” என்று, கவலை தெரிவித்து உள்ளார்.
நடப்பு IPL தொடரில் முதல்முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்து பாயிண்ட் டேபிளில் பள்ளத்தில் கிடக்கிறது. கேப்டனாக தோனியை கொண்டு வந்தும் எதுவும் மாறவில்லை. ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்காமல் விட்டது தான் இதற்கு காரணம் என்று, சுரேஷ் ரெய்னா கூட அண்மையில் கழுவி ஊற்றினார்.
Play Off ரேஸில் இருந்து CSK வெளியேறியதால், ரசிகர்களும் வெந்து நொந்து போய் இருக்கின்றனர். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், ஆயுஷ் மாத்ரேவின் அதிரடியை பிளெமிங் குறை சொல்வது, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.