அம்மா னா யாருக்கு புடிக்காது..என்பதை நாம் ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்டே இருக்கிறோம். அந்த வகையில் முதலமைச்சருக்கு சிறுவன் ஒருவன் எழுதிய கடிதத்தில், நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் என்று எழுதியது ஒரு நிமிடம் கலங்கடிக்க செய்கிறது. இதனைப்பற்றி விரிவாக பார்க்கலாம்!
அதாவது, மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன் மற்றும் மகனை பார்த்து செல்வாராம். இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் சிறுவன் கூறியிருப்பது, ‛‛அன்புள்ள மம்தா (மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி) பாட்டி. நான் அசன்சோலில் வசித்து வருகிறேன். என் அப்பா மற்றும் தாத்தாவுடன் இங்கு இருக்கிறேன். என் அம்மா என்னை விட்டு பிரிந்து பணியாற்றி வருகிறார். வடக்கு தினாஜ்பூரில் அவர் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக எங்களை விட்டு பிரிந்துள்ளார். அவ்வப்போது மட்டுமே என்னை பார்க்கவருகிறார். என் அம்மா இல்லாமல் நான் கவலையாக இருக்கிறேன்.
என் அம்மா மீது எனக்கு அதிக அன்பு இருக்கிறது இதனால் அவரை பிரிந்து வாழ விரும்பவில்லை. எனவே என் அம்மாவுக்கு பணி இடமாறுதல் வழங்க வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார்.மேலும்,ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர். இது குறித்து சிறுவன் ஐதிஜ்யா பேசியதில், முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் தெரிவித்தார்.