முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் தமிழ்நாடு மற்றும் பிற தென்மாநிலங்களுக்கு எதிராக செய்யப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்காக தென்மாநிலங்கள் பாடுபட்டதற்காக இவ்வாறு தண்டிக்கப்படுகிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது மக்கள் ஒற்றுமையாக நடத்தும் எதிர்ப்புப் போராட்டமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் குரலை மத்திய அரசு மதிக்காமல் பின்வாங்காவிட்டால் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவராக மட்டுமல்ல, சுயமரியாதை கொண்ட தமிழனாகவும் இந்த விவகாரத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் முலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
