தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை அதிமுகவிடம் 50 தொகுதிகளை கேட்டு வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 7 ஆம் தேதி காலை, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து, பாமக கூட்டணியில் இடம்பெறுவதை உறுதி செய்தார். அதே நாளின் மாலையில், எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடந்த இந்த சந்திப்பின் போது, அமித்ஷா எடப்பாடி பழனிசாமியுடன் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு 50 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜகவே தீர்மானித்துள்ளதாகவும், சொல்லப்படுகிறது. மேலும், பாஜக கேட்கும் 50 தொகுதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், பாஜக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து ‘செக்’ வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜக கோரும் 50 தொகுதிகளில் தற்போது 30 தொகுதிகள் திமுக வசமும், 5 தொகுதிகள் அதிமுக வசமும், 6 தொகுதிகள் காங்கிரஸ் வசமும், 4 தொகுதிகள் பாஜக வசமும் உள்ளன. மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தலா ஒரு தொகுதி வீதம் உள்ளது.
