காஞ்சிபுரம் அருகே ஏரியில் இருந்து மண் லாரிகளை நிறுத்தி தட்டிக்கேட்ட கிராம மக்கள் மீது பாஜக பிரமுகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம் அடுத்த உள்ளாவூர் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்த நாள் ஒன்றிற்கு சுமார் 1000 முதல் 2000 லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த லாரிகள் பகல் நேரங்கள் மட்டுமல்லாது அதிகளவில் இரவு நேரங்களிலும் தொள்ளாழி கிராம சாலை வழியாக செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் விபத்து ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்தனர். இதையடுத்து, பாஜக கொடி கட்டிய காரில் வந்த நபர்கள் அக்கிராம மக்களை அச்சுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில பட்டியலின அணியின் பொருளாளர் மதியழகன் மற்றும் உடன் வந்த கும்பல் மீதும் அக்கிராம மக்கள் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.