கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகாவில் உள்ள பேனச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (32). இவரது மனைவி காவ்யா (27). இந்த தம்பதிக்கு 4 வயது மகள் உள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காவ்யா சாம்பார் சமைத்ததாக கூறப்படுகிறது. அந்த சாம்பாரையே அவர் பிரிட்ஜில் வைத்து, தொடர்ந்து மூன்று நாட்களாக கணவர் மற்றும் குழந்தைக்கு உணவுடன் பரிமாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது நாளும் அதே சாம்பாரை உணவாக பரிமாறியதை பார்த்த ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார். “ஏன் மூன்று நாட்களாக ஒரே சாம்பாரை பரிமாறுகிறாய்?” என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரங்கசாமி மனைவி காவ்யாவை திட்டியதுடன், அவரை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மனம் உடைந்த காவ்யா விரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதை அவர் முதலில் யாரிடமும் கூறவில்லை. சில நேரத்தில் அவர் வாந்தி எடுத்தபோதுதான் விஷம் குடித்தது ரங்கசாமிக்கு தெரியவந்தது.
இதையடுத்து காவ்யாவை குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒரே சாம்பாரை மூன்று நாட்களாக பரிமாறியதை குறித்து ஏற்பட்ட தகராறில் கணவர் திட்டி தாக்கியதால் மனமுடைந்து காவ்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
காவ்யாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவ்யாவின் மரணத்தால், அவர்களின் 4 வயது குழந்தை தாயை இழந்து பரிதவித்து வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
