தமிழக அரசு செயலாளராக பணியாற்றிய பீலா வெங்கடேசன், 56 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். யார் இந்த சிங்கப் பெண் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொரோனா தொற்று பரவிய காலத்தில் மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்திய நிர்வாகியாக பிரபலமானவர் பீலா. இவர் பிறந்தது 1969ம் ஆண்டு. முன்னாள் காங்கிரஸ் MLA ராணி வெங்கடேசனுக்கும் காவல் துறை டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.என். வெங்கடேசனுக்கும் மகளாய் பிறந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி என்றாலும், வளர்ந்தது மற்றும் கல்வி அனைத்தும் சென்னையில் தான். படிப்பில் ஆர்வமிக்க அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார்.
கல்லூரி நாட்களில் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸை திருமணம் செய்து கொண்டார். மருத்துவ பட்டம் பெற்ற பின்பும், குடிமைப் பணி மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் 1997ல் IAS தேர்வில் வெற்றி பெற்றார். முதலில் பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பணியாற்றிய அவர், பின்னர் மத்திய ஹோமியோபதி துறை மற்றும் ஜவுளித் துறைகளிலும் பணியாற்றினார். கணவர் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தானும் தமிழக கேடரில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்றார்.
செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வள இயக்குநர் போன்ற பதவிகளில் பணியாற்றிய பீலா, 2019இல் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் COVID-19 பரவலை சமாளிக்கும் திறனுடன் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் விவாகரத்து பெற்று, பீலா வெங்கடேசன் என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்கினார். இறுதியாக தமிழக அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தார்.
மூளை புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று சென்னையில் காலமானார். ஆனாலும் மக்கள் மனங்களில் தடம் பதித்த நிர்வாகியாக பீலா வெங்கடேசன் என்றும் நினைவில் நிற்பார் என்பது நிச்சயம்.