இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது. நம்ம ஹிட்மேன், கேப்டன் ரோஹித் சர்மாவை, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது BCCI. இந்த முடிவு, கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல, முன்னாள் வீரர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இது ஒரு சாதாரண முடிவு அல்ல, இது ஒரு திட்டமிட்ட அவமானம் என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி சாடியுள்ளார்.
நடந்தது இதுதான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மா ஒரு வீரராக அணியில் இருந்தாலும், கேப்டன் பொறுப்பு இளம் வீரர் சுப்மன் கில்லிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் ஏன்?
இது குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, BCCI-யின் இந்த முடிவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது ரோஹித் சர்மாவுக்குச் செய்யப்பட்ட ஒரு அவமரியாதை, ஒரு அசிங்கம். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்த தியாகங்களையும், பெற்ற வெற்றிகளையும் கருத்தில் கொண்டால், இது ஒரு அவமானகரமான செயல்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஒரு கேப்டனிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? வெற்றிகளைத்தானே? அதை அவர் கொடுத்துள்ளார். இந்தியாவை சாம்பியன்ஸ் டிராபி ஜெயிக்க வைத்தார், டி20 உலகக் கோப்பையை வென்றார், 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர்தான் ஆட்ட நாயகன். இவ்வளவு செய்த ஒரு கேப்டனுக்குக் கிடைக்கும் மரியாதை இதுதானா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த முடிவின் பின்னணியில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பங்கு இருக்கலாம் என்றும் மனோஜ் திவாரி சூசகமாகத் தெரிவித்துள்ளார். “தற்போது அணியை நடத்துபவர், தனது பதவிக் காலத்தில் அனைத்து இளம் வீரர்களையும் கொண்டு வந்து, மொத்தக் கதையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார்” என்று அவர் கூறியிருப்பது, கம்பீரைக் குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கேப்டன்சி மாற்றம், ரோஹித் மற்றும் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. “ஒன்னு நல்லா விளையாடுங்க, இல்லைனா டீமை விட்டு வெளியே போங்க” என்ற செய்தியை தேர்வுக்குழு அனுப்பியுள்ளது. 2027 உலகக் கோப்பைக்கான இளம் அணியைக் கட்டமைப்பதாகக் கூறி, சீனியர் வீரர்களை அவமானப்படுத்துவது சரியா?
ரோஹித் சர்மா போன்ற ஒரு வெற்றிகரமான கேப்டனை, இப்படி திடீரென பதவியில் இருந்து நீக்கியது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது சரியான முடிவா, அல்லது அவமானமா? இதன் பின்னணியில் கம்பீரின் தலையீடு இருக்குமென நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை கமன்ட் பகுதியில் தெரிவு படுத்துங்கள்.
