முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு IPL தொடரில் BCCI-க்கும், அணிகளுக்கும் நடுவில் கடும் முட்டல், மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. சொந்த மைதானங்களில் சாதிக்க முடியாமல் போனதற்கு BCCI தான் காரணம் என்று, அனைத்து அணிகளுமே போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இதனால் தற்போது பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங்கிற்கும் முக்கியத்துவம் அளித்து போட்டிகளுக்கான ஆடுகளங்கள் வடிவமைக்கப் படுகின்றன. இந்தநிலையில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து அணிகளுக்கும், BCCI வார்னிங் விடுத்துள்ளது.
அதாவது ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்திட கடும் முயற்சி செய்து வருகிறாராம். இதனால் தெரியாத அந்நிய நபர்களிடம் பேசுவது, அன்பளிப்புகள் பெறுவது, நட்பு பாராட்டுவது ஆகியவற்றை செய்ய வேண்டாம்.
நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்று, அனைத்து அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆகியோருக்கு BCCI எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உங்களை சந்தித்தால், எங்களிடம் புகாரளியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் அந்த தொழிலதிபர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது. எனவே அவரிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் BCCI அறிவுறுத்தி இருக்கிறது.
சூதாட்ட புகாரில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு கால தடையை சந்தித்தன. இதனால் மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நடைபெறக் கூடாது என்று, BCCI கருதுகிறதாம். இதன் காரணமாக நடப்பு தொடரில் மேலும் பல விதிகளை BCCI, அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
2012ம் ஆண்டுவரை மேட்சுக்கு பிறகான இரவுநேர பார்ட்டிகள், IPLல் வாடிக்கையான ஒன்றாக இருந்தது. ஆனால் சூதாட்ட முயற்சிகள் அங்கு நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததால், அதற்குப் பின்னர் போட்டிக்கு பிறகான Night பார்ட்டிகள், BCCI ஆல் முற்றிலும் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.