Tuesday, April 1, 2025

மோடி அரசால் வங்கிகள் ‘கலெக்ஷன் ஏஜெண்டுகளாக’ மாற்றப்பட்டுள்ளன : மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மே 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் : துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் நமது வங்கிகள் ‘கலெக்ஷன் ஏஜெண்டுகளாக’ மாற்றப்பட்டுள்ளன.

SMS எச்சரிக்கைகளுக்கு காலாண்டிற்கு ₹20-25 வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு குறைந்தது ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது. KYC அப்டேட்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

முன்னதாக, மத்திய அரசு இந்தக் கட்டணங்களால் வசூலிக்கப்படும் தொகையின் தரவை பாராளுமன்றத்தில் வழங்கியது. ஆனால் இப்போது “ரிசர்வ் வங்கி அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை” என்று சாக்கு கூறி இந்த நடைமுறையும் அரசு நிறுத்தி உள்ளது என அதில் பதிவிட்டுள்ளார்.

Latest news