இந்தியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே இப்போது ஒரு புதிய ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) முழு உறுப்பினர் ஆவதற்கான தனது முயற்சிக்கு, இந்தியாதான் முட்டுக்கட்டை போடுவதாக அஜர்பைஜான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானுடனான நெருங்கிய உறவுகளுக்காக, இந்தியா தங்களைப் பழிவாங்குவதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவே கூறியிருப்பது, இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அஜர்பைஜானின் குற்றச்சாட்டு என்ன?
அஜர்பைஜானின் தொலைக்காட்சி ஒன்றில், “SCO-வில் முழு உறுப்பினராக அஜர்பைஜான் முயற்சிப்பதை, இந்தியா மீண்டும் தடுத்துவிட்டது,” என்று செய்தி வெளியாகியுள்ளது.
“இது, பலதரப்பு ராஜதந்திரக் கொள்கைகளுக்கும், ‘ஷாங்காய் உணர்வுக்கும்’ எதிரானது,” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
“இந்தியாவின் இந்த முடிவுக்குக் காரணம், அஜர்பைஜான், பாகிஸ்தானுடன் கொண்டிருக்கும் சகோதரத்துவ உறவுகள்தான்,” என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திடீர் மோதலுக்குப் பின்னணி என்ன?
இந்த ஆண்டு மே மாதம், இந்தியா பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டபோது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சில நாடுகளில் அஜர்பைஜானும், துருக்கியும் அடங்கும்.
“இந்தியா, பாகிஸ்தானின் இறையாண்மையை மீறி, அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுவிட்டது,” என்று அஜர்பைஜான் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த ஆதரவுதான், இப்போது அவர்களுக்குப் boomerang-ஆகத் திரும்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் துருக்கி மற்றும் அஜர்பைஜானைப் புறக்கணிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இதன் விளைவாக, EaseMyTrip, Ixigo, MakeMyTrip போன்ற பல இந்தியப் பயண நிறுவனங்கள், துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கான பயணப் பொதிகளை ரத்து செய்தன. இதனால், இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்தது.
இந்த சுற்றுலாத் தடை, அஜர்பைஜானின் பொருளாதாரத்தை எப்படிப் பாதித்தது?
சமீப ஆண்டுகளாக, இந்திய சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக அஜர்பைஜான் மாறி வந்தது. 2024-ல், அங்கு சென்ற மொத்த சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்கள் சுமார் 10 சதவிகிதம்.
ஒரு இந்தியர், ஒரு பயணத்திற்கு சுமார் 1 லட்சம் முதல் 1.30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்வதால், இந்தத் தடை, அஜர்பைஜானுக்கு ஒரு பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம், SCO உறுப்பினர் பதவிக்கு இந்தியா தடை போடுவதாகக் குற்றச்சாட்டு. மறுபுறம், பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு.
இந்தச் சூழ்நிலையில்தான், SCO மாநாட்டின்போது, அஜர்பைஜான் அதிபர் அலியேவ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், “இந்தியா எங்களைத் தடுத்தாலும், நாங்கள் பாகிஸ்தானுடனான சகோதரத்துவத்திற்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்,” என்று கூறியுள்ளார்.