2025 ஆம் ஆண்டில் தங்க விலை அதிர்ச்சி தரும்படி உயர்ந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து இன்று வரை தங்கம் எதிர்பாராத உச்சங்களை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறிவிட்டது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் ஆபரண தங்க விலை வரலாற்றில் இல்லாத உயர்வுகளை தொட்டுள்ளது. தினமும் “புதிய உச்சத்தில் தங்கம்” என்ற தலைப்பை செய்திகளில் காணும் நிலை ஏற்பட்டது. தற்போது ஒரு பவுன் நகைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஒரே மாதத்தில் தங்கம் கிராமுக்கு ரூ.1000-க்கும் மேல், சவரனுக்கு ரூ.9000-க்கும் மேல் உயர்ந்திருப்பது விலை உயர்வின் தீவிரத்தைக் காட்டுகிறது. செப்டம்பர் 1-ஆம் தேதி தங்கம் வாங்கியவர்கள், தற்போதைய விலையுடன் ஒப்பிட்டால் சவரனுக்கு ரூ.9000 வரை சேமித்து இருப்பார்கள்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, மேலும் வட்டி குறைப்பு அறிவிப்பு, டொனால்ட் ட்ரம்பின் இறக்குமதி வரி கொள்கைகள் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.
இந்த நிலையில், “தங்கம் விலை குறையும் வரை காத்திருந்து வாங்க வேண்டும்” என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும் என முதலீட்டு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வருங்கால மாதங்களிலும் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது என்பதால், சிறிய சரிவு ஏற்பட்டாலே உடனடியாக வாங்கி வைக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நகை வாங்க விரும்புவோர் நம்பகமான கடைகளில் நகை சீட்டு போடலாம். முதலீட்டுக்காக விரும்புவோர் கோல்டு ETF போன்ற திட்டங்களில் படிப்படியாக முதலீடு செய்யலாம் எனவும் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.