இந்தியாவில் ஜிஎஸ்டி வரி திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கார் சந்தையிலும் பெரிதாக உணரப்படும். குறிப்பாக, மாருதி நிறுவனம் தனது கார்களின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைய இருப்பதாக அறிவித்துள்ளது.
சிறிய கார்கள் மீது ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், நேரடியாக விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளது. மாருதி S-Presso காரின் விலை ரூ.1.29 லட்சம் குறைந்து, இப்போது ரூ.3,49,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆல்டோ K10 க்கு ரூ.1,07,600 குறைப்பு வழங்கப்பட்டு, புதிய விலை ரூ.3,69,900 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் விரும்பும் Swift மற்றும் Dzire மாதிரிகளுக்கும் சுமார் ரூ.85,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவை சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்பில் கிடைக்கின்றன. மேலும், Brezza, Fronx போன்ற பிரபல SUV வகை கார்களின் விலை அதிகபட்சம் ரூ.1.12 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், கார் வாங்கத் திட்டமிட்டிருப்போருக்கு இது ஒரு பெரிய நன்மை எனக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு கார் விலைகளில் கிடைக்கும் தள்ளுபடி, இந்திய கார் சந்தையை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
