இந்திய ரயில்வே பயணிகளுக்கு முக்கியமான மாற்றம் மே 1ஆம் தேதி முதல்a அமலுக்கு வருகிறது. கோடை காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயிலில் பயணிப்பதை முன்னிட்டு, டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு, தட்கல் டிக்கெட் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறும் விதிகளில் தெளிவான முறையை எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஒவ்வொரு ரயிலுக்கும் தனித்தனி முன்பதிவு காலம் இருந்தது. இது பயணிகளை பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது. ஆனால் இனி அப்படி அல்ல. மே 1 முதல் எல்லா ரயில்களுக்கும் ஒரே மாதிரியான 120 நாள் முன்பதிவு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மெயில் ரயிலாக இருந்தாலும், எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாக இருந்தாலும் பொருந்தும். இதன் மூலம் பயண திட்டங்களைச் சீராக அமைத்துக் கொள்ளும் வசதி ஏற்படும்.
தட்கல் டிக்கெட்டுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏசி வகைகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகைக்கு காலை 11 மணிக்கும் தொடங்கும். மேலும், ஒரு பயனர் ஐடியால் ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். எந்த ரயிலிலும் 30 சதவீத இருக்கைகள் மட்டுமே தட்கல் இடங்களுக்கு ஒதுக்கப்படும்.
பணத்தை திரும்பப்பெறும் விதிகளும் இப்போது தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. 48 மணி நேரத்துக்கு மேலாக முன்பே ரத்து செய்தால் 75 சதவீத பணம் திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேர இடைவெளிக்குள் ரத்து செய்தால் 50 சதவீதம் மட்டுமே திரும்பும். 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் எந்தத் தொகையும் கிடையாது. உறுதிபெறாத காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கு முழு பணம் திரும்பக் கிடைக்கும்.
இந்த மாற்றங்கள் பயணிகளை நிம்மதியாகவும் நியாயமாகவும் ரயில்வே சேவையை பயன்படுத்தச் செய்வதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.