தங்க நகை வாங்கப்போறீங்களா? இந்த 3 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றனும்

தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து, ஒரு பவுன் நகை வாங்குவதற்கே ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தங்க விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், தங்க நகை வாங்குவோருக்காக மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் சில முக்கிய விதிமுறைகளை அறிவித்துள்ளன. இந்த விதிகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான ஆவணங்களுடன் நகைக்கடைக்கு செல்வது மிகவும் அவசியம்.

விதிமுறை 1

நீங்கள் நகைக்கடையில் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள தங்க நகை வாங்கினால், உங்கள் நிரந்தர கணக்கு எண் அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். நகைக்கடைகள் இந்த தகவல்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் கேட்கப்படுகின்றன. தற்போதைய விலையில் இரண்டு பவுன் நகை வாங்கினாலேயே இந்த ஆவணம் அவசியமாகிறது. எனவே இரண்டு பவுனுக்கு மேல் தங்க நகை வாங்குபவர்கள், நகைக்கடைக்கு செல்லும் போது நிரந்தர கணக்கு எண் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

விதிமுறை 2

நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்கும் நோக்கில், அதிக மதிப்புள்ள பணப்பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. நீங்கள் பத்து லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள தங்கம் வாங்கினால், நிரந்தர கணக்கு எண் அட்டையுடன் கூடுதல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தங்கத்தின் மதிப்பு பத்து லட்சம் ரூபாயை கடந்தால், ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கான ஆவணங்களையும் வழங்க வேண்டும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நடைபெறும் எந்த பரிவர்த்தனையும் வங்கிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதனால் இத்தகைய ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.

விதிமுறை 3

தங்கத்தின் மதிப்பிற்கு மூன்று சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் செய்கூலி கட்டணத்திற்கு ஐந்து சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. இந்த வரிகளை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. எனவே தங்க நகை வாங்கும் போது, தங்கத்தின் எடை, செய்கூலி, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ள தெளிவான ரசீதை பெறுவது அவசியம். ரசீது வழங்கப்படாத நிலையில் ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், தங்க நகையில் தரச் சான்று முத்திரை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நகை வாங்கியதற்கான உரிய ரசீதை பெறுவது கட்டாயம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related News

Latest News