Tuesday, April 15, 2025

ரூ.1 லட்சத்தை எட்டிவிடுமா அல்லது 40% சரிந்து தரைதட்டுமா? தங்க நகை வாங்கப் போறீங்களா? சத்தமின்றி நடக்கப்போகும் சம்பவம்!

“ஏதோ தங்கம் விலை 1 லட்சத்தை தொட்டுடும்ன்றாங்க… அதெல்லாம் இல்ல… விலை 40% சரியும்ன்னு சொல்றாங்க…” அட எது தான்பா உண்மை என்று தலையை பிய்த்ததுக்கொள்பவர்களுக்கு உலக பொருளாதார வல்லுனர்கள் என்ன கணிக்கிறார்கள் என்பது ஒரு சிறிய நம்பிக்கையை கொடுப்பதாக இருக்கும்.

அமெரிக்காவில் இயங்கி வரும் நிதிச் சேவை நிறுவனமான மார்னிங்ஸ்டாரின் பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1,820 டாலராகக் குறையும் என்று கணித்துள்ளார். இது அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரத்து 80 டாலர் என்ற தற்போதைய நிலையோடு ஒப்பிடும்போது கணிசமான சரிவே. இது கிட்டத்தட்ட 38-40% இறக்கம் என்பதால் தங்கச் சந்தையை சற்று ஆட்டம் காணவே செய்யும் என்று சொல்லப்படுகிறது. இப்போது தங்கம் விலை பறந்து கட்டி உயர்ந்தாலும் இனி ஏறுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பதால் இனி குறையவே தொடங்கும் என்று யூகிக்கப்படுகிறது.

இது ஒரு புறம் என்றால் இந்த ஆண்டு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் இரண்டு வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ளவிருப்பத்தால் 2025ம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் இப்போது 10 கிராம் தங்கம் 95 ஆயிரத்து 400 ரூபாய் என்று விற்கப்பட்டாலும் இது 1 லட்சம் ரூபாயை அடைய வாய்ப்பு இருப்பதாக காமா ஜூவல்லரியின் நிர்வாக இயக்குநர் கொலின் ஷா கணித்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கமாடிட்டிஸ் மற்றும் தலைவரான கிஷோர் நார்னே, தங்கம் இவ்வளவுதான் அதிகரிக்கும் என்று “உச்சவரம்பு எதுவும் இல்லை”. தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 முதல் 4,500 வரை கூட சத்தமில்லாமல் உயருவதோடு நீங்கள் எந்த டார்கெட் அமைத்தாலும், அது இறுதியில் 1 லட்சத்தை அடையும் என்றும் இந்த வருடம் அடையவில்லை என்றாலும் அடுத்த வருடம் அடையும் என்று சொல்லி இருப்பது நாடி துடிப்பை எகிறச்செய்கிறது.

சிலர் என்னவென்றால் விலை அதிகரிக்கும் என்கிறார்கள்… சிலர் விலை குறையும் என்கிறார்கள். இதனால் உங்களுக்கு குழப்பமாக இருந்தாலும் மற்ற முதலீடுகளை ஒப்பிடுகையில் தங்கம் இப்போதும் பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news