பொதுவாக, இந்தியாவில் தங்கம் கெளரவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது என்பது உண்மையே. மேலும், விழா காலங்களில் தங்கம் வாங்குவது சிறப்பு மிக்க ஒன்றாக இருக்கிறது. மேலும் சில குறிப்பிட்ட நாட்களில் தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக, அந்த நாட்களில் தங்கம் வாங்க மக்கள் நீயா நானா என போட்டி போடுவதால் தங்கத்தின் Demand எகிறி விடுகிறது. மொத்த பணமும் கொடுத்து நகை வாங்க முடியாவிட்டாலும் மாதாந்திர நகை சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பணம் செலுத்தி ஒரு குண்டுமணியாவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்களை உலுக்கி எடுக்கிறது.
அட்சய திருதியை மாதிரியான விசேஷ நாட்களுக்கு முன்னதாகவே கடைகளுக்கு போய் இஷ்டமான நகைகளை Select செய்து, சேமிப்பு பணத்துடன் கூடுதலாக பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து பிறகு குறிப்பிட்ட நாளில் சென்று நகையை வாங்கிக்கொள்வார்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை மாறி மாறி மளமளவென ஏறுவதும் சட்டென குறைவதுமாக இருக்கும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக உச்சத்தை தொட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் சற்று குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயர்ந்துவிட்டது. இதற்கிடையே, வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா அல்லது குறையுமா என்று அறியப்படாத நிலையில், வரும் 30ம் தேதி அட்சய திருதியை கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து தங்கம் வாங்க நகைக் கடைகள் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பல நகைக்கடைகள் அட்சய திருதியை முன்பதிவுக்கு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், “தற்போது தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால் அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்ய வருவோர், விரும்பிய நகைகளை தேர்வு செய்து 10 சதவீத தொகையை முன் பணமாக கட்டி முன்பதிவு செய்கின்றனர்.
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வருகையில், முன்பதிவு செய்திருந்த தினத்தில் இருந்து கட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு அட்சய திருதியை நாளில் நகை வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டம் மக்களை கவருவதாக இருப்பதால் பலரும் அட்சய திருதியைக்கு நகை வாங்க முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.