மழைக்காலம் தொடங்கியவுடன் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் ஏதாவது ஒரு வகையான ஒவ்வாமையால் பாதிக்கப்படுவார்கள். எந்த நோயையும் தடுக்க சிறந்த வழி அதனை வராமல் காத்துக் கொள்வதுதான். எனவே, இந்த பருவகாலத்தில் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் சில முக்கிய முன்னெச்சரிக்கைகள் அவசியமாகின்றன.
இந்த காலத்தில் பரவும் வைரஸ் தொற்றுகள் பெரும்பாலும் தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் எளிதாக பரவுகின்றன. ஆகையால், தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது அவசியம். தொற்று நீங்கும் வரை பள்ளி, அலுவலகம், கூட்ட நெரிசல் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இது பிறருக்கு தொற்று பரவுவதைத் தடுக்க உதவும்.
அத்தியாவசியமாக வெளியில் செல்ல வேண்டிய நேரங்களில் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு அடிக்கடி கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
உணவில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டை, மீன், மாமிசம், பனீர், சோயா, பயறு, கடலை போன்ற உணவுகளை தினமும் உட்கொள்வது நல்லது. மேலும், கொதிக்கவைத்து ஆறவைத்த நீரையே அருந்துவது முக்கியம்.
வீட்டில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேங்கிய நீர், கொசு மற்றும் கிருமி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மழையில் நனைந்தால் உடனே உலர்த்திக்கொள்வது முக்கியம். இந்த சிறிய முன்னெச்சரிக்கைகள், பருவகால நோய்களைத் தவிர்க்க உதவும்.
