LPG பயனர்களுக்கு புதிய நம்பிக்கை தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, அமெரிக்காவில் இருந்து நீண்டகால LPG இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின்படி, அரசு நிர்வாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து 2026க்குள் அமெரிக்காவிலிருந்து மூன்று பெரிய LPG கப்பல்களை வாங்கும் திட்டத்துடன் டெண்டர் ஆவணங்களை வெளியிட்டுள்ளன. தற்போது 331 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு LPG வழங்கப்படுகின்றது. அதில் 60%க்கும் மேல் இறக்குமதியின் மீது தான் இந்தியா சார்ந்துள்ளது.
சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியாவிற்கு ஏற்கனவே நீண்டகால ஒப்பந்தங்கள் உள்ளன. ஆனால், அமெரிக்காவுடன் இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ளுவது இதுவே முதல்முறையாகும். இந்த முயற்சி, இந்தியாவிற்கு மேலும் ஒரு நிலையான விநியோக வாய்ப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க சப்ளையர்களிடையே போட்டி அதிகரித்தால், விலைகள் குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும், சீனா அமெரிக்காவில் இருந்து LPG வாங்குவதை குறைத்தால், இந்தியாவிற்கு அதிக இறக்குமதி வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், நாட்டின் உள்நாட்டு நுகர்வோருக்கு விலைகள் ஒரளவு நிலையானதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
எனினும், ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை LPG விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகவே தொடரும். இருப்பினும், அமெரிக்காவுடன் நீண்டகால LPG ஒப்பந்தம் இந்திய நுகர்வோருக்கு சாதகமாக அமையும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.