ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இப்பொழுதும் அப்பொழுதுமாக சிற்சில சர்ச்சைகளும் அவ்வப்போது விரிசல்களும் என்று மோதல் போக்கு இருந்துவரும் நிலையில் விரைவில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுவது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. இதனால் இருநாடுகள் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில் அமெரிக்காவை திக்குமுக்காடவைக்கும் பயங்கர வேலையில் 4 அரபு நாடுகள் களத்தில் குதித்துள்ளன. அது என்னவென்றால் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளன.
சமீப நாட்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு அமெரிக்கா Plan போட்டு வருகிறது என்றாலும் அமெரிக்காவும், ஈரானும் நேரடியாக எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் அமெரிக்கா மற்ற நாடுகளின் வான் எல்லைகள் வழியாக தங்கள் நாட்டின் விமானங்களை பறக்க செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தான் அரபு நாடுகள் தங்களின் வான் எல்லைகளில் அமெரிக்க விமானங்கள் பறக்க தடாலென தடை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையை ஒட்டிய தங்களின் வான் எல்லையில் 2 நாட்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளன.
அதாவது ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் தங்களின் எதிர்ப்பை ஆணித்தரமாக பதியச்செய்ய இந்த தடையை விதித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதோடு ஈரான் மீது உடனடியாக தாக்குதல் நடத்த முடியாமல் கையை பிசையும் நிலை உருவாகியுள்ளது. ஈரான் மீது குண்டுகளை வீசுவோம் என்று அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் பொங்கி எழுந்த நிலையில் தற்போது தற்காலிகமாக 2 நாட்கள் மட்டும் இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதோடு வரும் நாட்களில் இந்த தடை நீட்டிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுவது நிலைமை மேலும் மோசமாவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த தகவல் அமெரிக்காவின் மூத்த அதிகாரியால் உறுதி செய்யப்பட்டிருப்பதோடு அடுத்த மாதம் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக முக்கிய தகவல் ஒன்று கசிந்து சர்வதேச அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.