பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கூகுள் க்ளவுட் உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய virtual இசைக் குழுவை உருவாக்க உள்ளார். இவர் அறிமுகப்படுத்திய ‘சீக்ரெட் மவுண்டேன்’ virtual இசைக்குழு, 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் செயல்படத் தொடங்கியது.
இக்குழுவில் ஆறு virtual கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு இனங்களையும் கலாச்சாரங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். முக்கியமாக, இவர்கள் முற்றிலும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள். இந்த குழுவின் முக்கிய நோக்கம், அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்குக்கான இசை ஆல்பத்தை உருவாக்குவதாகும். இதற்காக, ஏ.ஆர்.ரஹ்மான் கூகுள் க்ளவுட் வழங்கும் முன்னணி ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளார்.
இதில் வியோ 3, இமேஜென், ஜெமினி ஃப்ளாஷ் 2.5, ஜெமினி 2.5 ப்ரோ போன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இசைக் கலைஞர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் இணைந்து பணியாற்றும் போது பார்வையாளர்களை கவரும் புதிய அனுபவங்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இதுபற்றி கூறும் போது, ‘சீக்ரெட் மவுண்டேன்’ என்பது இசை, கதை சொல்லுதல் மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்து புதிய அனுபவங்களை தரும் முயற்சி. ஒவ்வொரு virtual பாத்திரத்தின் பின்னிலும் தயாரிப்பாளர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் வழிகாட்டிகள் என பல்வேறு மனித திறமையை கொண்ட குழு உழைக்கிறது. இது கலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மனிதர்களின் முழுமையான கொண்டாட்டம்’ என்றார்.
இந்தத் திட்டம், இசையின் புதிய வடிவங்களை சந்திக்கும் உலகளாவிய அரங்கத்தில் தனித்துவமான முயற்சியாகும். பார்வையாளர்கள், ஏஐ தொழில்நுட்பம் மற்றும் மனித திறமையின் இணைப்பில் உருவாகும் இசையை அனுபவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
