ஈரான் போர் எதிரொலியால் இந்தியாவில் மீண்டும் லாக் டவுன்?

இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் இப்போது நீண்ட வரிசைகளை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு பக்கம் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பக் கூட்டம் அலைமோதுகிறது என்றால், மறுபக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா என்ற அச்சத்தில் மக்கள் முன்பதிவு செய்யக் குவிகிறார்கள்.

இந்தப் பதற்றத்திற்கு நடுவில், சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் ஒரு செய்தி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஈரான் போர் எதிரொலியாக, மீண்டும் கொரோனா காலத்தைப் போலவே இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு, அதாவது ‘லாக்டவுன்’ அமல்படுத்தப்பட உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.

உண்மையில் மக்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறார்கள் தெரியுமா? மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் கடுமையான போரால், கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வரும் எரிபொருள் சப்ளையில் தடை ஏற்படுமோ என்ற அச்சம்தான் இந்த அவசரத்துக்குக் காரணம். ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஒரு முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.

அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் நூறு சதவீதம் பொய்யானது” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமே பரிசீலனையில் இல்லை என்றும், இது போன்ற இக்கட்டான நேரங்களில் மக்கள் அமைதியாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியின் தலைமையில், நாட்டு மக்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக அவர் உறுதி அளித்துள்ளார். உலகமே போர்ப் பதற்றத்தில் இருந்தாலும், இந்தியா எதையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறது. எனவே மக்களே, வதந்திகளை நம்பி பெட்ரோல் பங்குகளில் கூடி பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் வேண்டுகோளாக உள்ளது.

Related News

Latest News