தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் பெரும் அதிர்வலைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக பாஜகவில் இதுவரை இல்லாத அளவிற்குக் குழப்பங்களும், அதிருப்திகளும் வெடிக்கத் தொடங்கியுள்ளன. 27 தொகுதிகளில் களம் கண்ட பாஜக, 26 இடங்களில் படுதோல்வியைச் சந்தித்து, பல இடங்களில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் திணறியிருப்பது டெல்லி தலைமையைத் தலைகுனிய வைத்துள்ளது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, “தமிழக பாஜகவை இனி நானே நேரடியாகக் கவனிக்கிறேன்” என்று தேசியத் தலைவர் நிதின் நபின் கூறியதாக வெளிவந்துள்ள தகவல், கட்சியின் தற்போதைய தலைமைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த சில மாதங்களாக ஓரங்கட்டப்பட்டிருந்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மத்தியில் இந்தத் தகவல் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக தனித்துப் போட்டியிட்டபோது கணிசமான வாக்கு வங்கியை ஈட்டியது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக கூட்டணி அவசியம் என்ற கணக்குப் போடப்பட்டது.
அதிமுக தரப்போ, அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை கூட்டணி சாத்தியமில்லை என்று முரண்டு பிடித்ததால், டெல்லி தலைமை வேறு வழியின்றி அண்ணாமலையை அமைதியாக ஓரங்கட்டியது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டு, அதிமுகவுடன் கைகோர்த்துத் தேர்தல் களம் காணப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளோ பாஜகவின் அனைத்துக் கணக்குகளையும் தவுடுபொடியாக்கிவிட்டது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும் பாஜகவால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது மட்டுமல்லாமல், அண்ணாமலை கேட்ட தொகுதியே அவருக்கு வழங்கப்படவில்லை என்ற வேதனையும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் புகைந்து கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் தோல்வி குறித்து டெல்லி தலைமை நடத்திய ரகசிய ஆய்வில், அண்ணாமலையை மாற்றியதும், அதிமுக கூட்டணியை அளவுக்கு அதிகமாக நம்பியதும் தான் பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, திமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாகத் துணிச்சலாக எதிர்கொள்ளக் கூடிய ஒரே முகம் அண்ணாமலை தான் என்று தொண்டர்கள் மத்தியில் பலமான ஒரு பிம்பம் உள்ளது. கட்சித் தலைமை அமைதியாக இருந்த காலத்திலும் அண்ணாமலை மட்டும் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்த இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் பதிவாகியிருப்பது டெல்லி தலைமையின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
இதற்கிடையில், நயினார் நாகேந்திரன் ஓரம் கட்டப்பட்டு, அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு முக்கிய பொறுப்பு அல்லது மாநிலத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கள் கமலாலய வட்டாரங்களில் வலுத்து வருகின்றன. தற்போது மிகவும் அமைதியாக இருக்கும் அண்ணாமலை, தேர்தல் தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், அவரது அமைதிக்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் புயல் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
2026-ல் திமுக பின்னடைவைச் சந்தித்ததும்,முதல்வர் விஜய் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்ததும் தமிழக அரசியலில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில், பாஜகவை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமானால் அண்ணாமலையைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு டெல்லி தலைமை வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ள நிதின் நபின், அண்ணாமலையை மீண்டும் முன்னிறுத்தி 2029 மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கப் போகிறார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.
