தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.
இந்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள்.
அர்ப்பணிப்புடன் கூடிய செயல் வீரரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர் ஒரு தொண்டராக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறார். கட்சியினரின் உணர்வு, விருப்பத்தின் பேரிலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
