Thursday, December 25, 2025

தொற்றுநோய்களை பரப்பும் பஸ் ஸ்டாண்டாக மாறிய அண்ணா பஸ் ஸ்டாண்ட்

மதுரை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த அண்ணாபேருந்து நிலையம்.  இது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மருத்துவகல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை இணைக்கும் பேருந்துநிலையம் ஆகும்.

இங்கிருந்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிக்கு பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து பெரும்பாலான மகளிர் இலவச பேருந்துகள் இயக்கப்படுவதால் அதில் பயணிப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பேருந்து நிலையத்திற்குள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மதுரை அண்ணா பேருந்து நிலையத்தை மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து மூழ்கியுள்ளது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாமல் சிறுநீர் கழிக்கும் இடத்தில்  ஆபத்தான முறையில் சர்க்கஸில் கயிறு மேல நடந்துசெல்வது போல அச்சத்தோடு மூக்கை மூடியபடி கடந்து செல்கின்றனர்.

பேருந்து நிலையம் முழுவதிலும் சிறுநீர் மழை நீரோடு கலந்து  துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்துக் கொண்டு பேருந்திற்குள் அமரும் பரிதாப நிலையில் பயணிகள் உள்ளனர்.

அப்போது சில நேரங்களில் பேருந்துகள் தாமதமாக வரும்வரை பேருந்து நிலையத்தில் அமர்வதற்காக வைக்கப்பட்டுள்ள  பயணிகள் அமரும் இடத்திற்கு கூட போக முடியாமல் கழிவுநீர் சூழ்ந்துள்ளதோடு அங்குள்ள டியூப் லைட்டுகள் உடைந்து தொங்குகிறது.

மேலும் பேருந்துநிலையத்தின் நுழைவாயிலில் 2 மதுபான கடைகள் உள்ளதால் பயணிகள் அமரும் இடத்தில் மதுபோதை மயக்கத்தில் உள்ள ராஜ போதையர்கள்  நிர்வாணகோலத்தில் படுத்து உறங்குவதோடு தூங்குவதற்கு இடம்பிடிக்கும் சண்டையில் ஆபாசமாக பேசுவதால் மகளிர் பேருந்தில் பயணிப்பதற்காக வரும் பெண்கள் அச்சத்தோடு காத்துகிடக்கின்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் பெயரில் உள்ள பேருந்து நிலையத்தை கழிவுநீர் தேங்கும் இடமாக மாற்றியது தான்  மாநகராட்சியின் சாதனையா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related News

Latest News