ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உட்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளான ஸ்பாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்ட அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கோபத்துடனும், கடுமையான குரலிலும் பேசினார்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் அருகே கோர விபத்தில் சிக்கியது. பஹனபஜார் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் கோரமண்டல் ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. பின்னர் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
தற்போது வரை 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த பஹனபஜார் பகுதிக்கு மோடி இன்று மாலை சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது அவரது முகம் சோகமாகவும், இறுக்கமாகவும் இருந்ததை பார்க்க முடிந்தது. அவரிடம் அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், விபத்து நடந்தது எப்படி, எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், காயமடைந்தவர்களின் நிலைமைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.