தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு ஒப்புதல்களை வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் நிர்வாகி அரசகுமாரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணையில் ரூ.100 கோடி வரை பணம் கைமாறியதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரிய நிலையில், நீதிமன்றம் மூன்று நாட்கள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி வழங்கியது.
இதற்கிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அரசாணையில் தாம் கையெழுத்திடவில்லை என்றும், வழக்கில் தனக்குத் தொடர்பில்லை என்றும் அவரது தரப்பு வாதிட்டது. மறுபுறம், லஞ்சப் பணப் பரிமாற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள சரவணனை விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து, ஜாமின் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், அவரது நீதிமன்றக் காவல் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16 நாட்களாக சிறையில் இருக்கும் அன்பில் மகேஷுக்கு இன்று ஜாமின் கிடைக்குமா அல்லது தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
