கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகம் எப்படி இருந்திருக்கும்? வறண்ட சிவப்பு பாலைவனமாகவா? இல்லை! பூமி போலவே, ஆறுகள் ஓடி, கடலில் கலந்த ஒரு நீல நிற கிரகமாக இருந்திருக்கலாம் என்கிறது ஒரு புதிய ஆய்வு. ஆம், செவ்வாயில் ஒரு காலத்தில் கடல் இருந்ததற்கான உறுதியான தடயங்கள் கிடைத்துள்ளன.
அர்கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியில் உள்ள பழந்தடயங்களை வைத்து, செவ்வாயின் ரகசியத்தை உடைத்துள்ளனர். பூமியில், ஒரு நதி கடலை நெருங்கும் போது, அதன் வேகம் குறைந்து, அகலம் குறுகி, ஒரு டெல்டாவை உருவாக்கும். இந்த மாற்றங்கள் நடக்கும் பகுதிக்கு ‘காயல் மண்டலம்’ (அதவாது,Estuarine Zone) என்று பெயர்.செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மண்டலம் மிசிசிப்பி நதியை விட 230 மைல் நீளமானது.
ஆச்சரியமாக, இதேபோன்ற மிக நீண்ட காயல் மண்டலங்களின் தடையங்களை விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் கண்டறிந்துள்ளனர். ஆர்பிட்டர் படங்கள் மூலம், வறண்டு போன பெரிய ஆறுகள், ஒரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான கடலில் கலந்ததற்கான புவியியல் சான்றுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். “உயிர் வாழ நீர் அவசியம். செவ்வாயில் இவ்வளவு நீர் இருந்திருந்தால், அங்கே உயிர் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்” என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வறண்டு போன ஆற்றின் தடயங்களை எப்படி கண்டுபிடித்தார்கள்? ” Topographic Inversion (தலைகீழ் நிலப்பரப்பு ) என்ற ஒரு செயல்முறை மூலம் இது சாத்தியமானது. ஆற்றின் அடிப்பகுதியில் படிந்த மணல், காலப்போக்கில் பாறையாகி, சுற்றியுள்ள மென்மையான மண் அரிக்கப்பட்ட பிறகு, ஒரு முகடு போல உயர்ந்து நிற்கிறது. இந்த முகடுகளை ஆய்வு செய்துதான், ஒரு காலத்தில் செவ்வாயின் வடக்குப் பகுதியை ஒரு பெரிய கடல் மூடியிருந்தது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
