Tuesday, December 30, 2025

‘அமித்ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார் : இ.பி.எஸ் – ஐ விமர்சித்த மு.க ஸ்டாலின்

திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கரூர் மாவட்டத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது : 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிப் பயணம் 2026-ம் ஆண்டிலும் நிச்சயம் தொடரும். உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும் வரை எந்தக் கொம்பனாலும் தி.மு.க.வை தோற்கடிக்க முடியாது.

தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே தி.மு.க.வை அழிப்போம், ஒழிப்போம் என்று சொன்னார்கள். திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று கூறுவோர், என்ன மாற்றப்போகிறார்கள்? மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள், மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மாறவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தெம்போ திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார்.எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

அதிமுகவை தொடங்கியபோது ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள். அதை இப்போது எடப்பாடி பழனிசாமி ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, ‘அமித்ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு? என்று கேட்பதைப்போல, டெல்லியில் கார் மாறிமாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று அவர் பேசினார்.

Related News

Latest News