அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பை எதிர்கொள்ளும் வகையில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால செயல் திட்டம் ஒன்றை விரைவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
அந்த அடிப்படையில், நிதியுதவி, சலுகைகள், சந்தை வாய்ப்புகளை விரிவுப்படுத்துவது தொடர்பான திறன் மேம்பாடு போன்றவற்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் சொல்கின்றன. மேலும், ஏற்றுமதியை பன்முகப்படுத்துதல், தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பயன்பாடு, பிரத்யேக வணிக வலைதளம் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், ஏற்றுமதியாளர்கள் நிதி நெருக்கடியை சுமூகமாக கையாள முடியும் என்பதுடன் வேலை இழப்பு தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த செயல் திட்டங்கள், செலவினங்களுக்கான நிதிக்குழுவின் பரிசீலனையில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த செயல் திட்டங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே டிரம்ப், ‘பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு வரும் அற்புதமான வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் கண்ணியத்துக்குரியதாகவும் ஆக்குகின்றன.
வரிகளும், நாம் ஏற்கனவே பெற்றுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நமது இராணுவ சக்தி உடனடியாக ஒழிந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.