உலக அரசியலில் நீண்ட கால நண்பர்களாகவும், நேட்டோ அமைப்பின் தூண்களாகவும் இருக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இப்போது ஒரு மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளது. ஏதென்ஸ் நகரில் கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்(Kyriakos Mitsotakis உடன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்காவைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளது சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவை இனி ஒருபோதும் ‘முழுமையாக நம்பத்தகுந்த ஒரு நட்பு நாடு’ என்று கருத முடியாது என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஒரு வல்லரசு நாட்டின் அதிபர் தனது சக வல்லரசு நாட்டைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாகக் குற்றம் சாட்டுவது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. மேக்ரானின் இந்த ஆக்ரோஷமான பேச்சிற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரக் காரணம் ஒளிந்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்கு இங்கிலாந்து போதிய ராணுவ ஆதரவு வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘ஃபாக்லாந்து’ தீவுகளுக்கான ஆதரவை அமெரிக்கா விலக்கிக் கொள்ளப் போவதாகப் பென்டகனின் ரகசிய அறிக்கை ஒன்று கசிந்துள்ளது.
தனது மிக நெருங்கிய நண்பனான இங்கிலாந்துக்கே அமெரிக்கா இப்படி ஒரு ‘துரோகத்தைச்’ செய்யத் துணிந்தால், மற்ற ஐரோப்பிய நாடுகளின் நிலை என்னவாகும் என்ற அச்சமே மேக்ரானின் பேச்சில் எதிரொலித்துள்ளது. “இந்த உலகம் இப்போது ஒரு ஒழுங்கற்ற சூழலில் (World of Disorder) சிக்கியுள்ளது” என்று அவர் மிக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த இக்கட்டான சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பிற்காக இனி அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது என்றும், ராணுவ ரீதியாகத் தனித்து இயங்க வேண்டியது அவசியம் என்றும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
“இனி வரும் காலம் ஐரோப்பியர்களுக்கான காலம்” என்று முழங்கிய அவர், தற்காப்பு மற்றும் இராஜதந்திர முடிவுகளில் ஐரோப்பா தனது சுயமான அதிகாரத்தைச் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நீடித்து வரும் அமைதியின்மை காரணமாக, உலக நாடுகளின் அதிகாரப் பகிர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஐரோப்பாவை ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியுள்ளன.
அமெரிக்காவின் ‘பான் கார்டு’ விதிகள் மற்றும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவின் இந்தத் திடீர் எதிர்ப்பு ட்ரம்ப் அரசுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தனது சொந்த நலனுக்காக நட்பு நாடுகளைத் தண்டிக்கும் அமெரிக்காவின் போக்கை ஐரோப்பா இனியும் பொறுத்துக் கொள்ளாது என்பதை மேக்ரானின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பற்றிப் பேசினாலும், மறுபுறம் நட்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் உலகப்போருக்கான அச்சத்தை இன்னும் அதிகரித்தே வருகிறது.
