நம்ம உடம்புல ஓடுற ரத்தம், நம்மளோட DNA… இது எல்லாமே நம்ம அப்பா அம்மா கிட்ட இருந்து வந்ததுன்னு நாம நம்பிட்டு இருக்கோம். ஆனா, அதுல சிலது வேற்று கிரகத்துல இருந்து வந்ததா இருந்தா எப்படி இருக்கும்? கேட்கவே அதிர்ச்சியா இருக்குல்ல? ஆனா, ஒரு புதிய ஆய்வு, நம்ம மரபணுவிலேயே ‘ஏலியன்’ DNA கலந்திருக்கலாம்னு சொல்லி, உலக விஞ்ஞானிகளையே ஒரு நிமிஷம் திரும்பிப் பார்க்க வெச்சிருக்கு.
DNA ரெசோனன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச்(Resonance Science Foundation – RSF) சேர்ந்த டாக்டர் மேக்ஸ் ரெம்பல் மற்றும் அவரது குழுவினர், ஒரு வினோதமான ஆராய்ச்சியை நடத்தியிருக்காங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னா, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி, வேற்று கிரகவாசிகள் மனிதர்களைக் கடத்திச் சென்று, அவங்களோட மரபணுக்களை நம்ம DNA-வுக்குள் செலுத்தியிருக்கலாம். இதன் மூலம், மனித இனமே ஒரு மாபெரும் மரபணு மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்பதுதான் அவங்களோட தியரி.
இந்த ஆய்வுக்காக, அவங்க ரெண்டு குழுக்களோட DNA-வை ஒப்பிட்டுப் பார்த்திருக்காங்க. ஒரு குழு, சாதாரண மக்கள். இன்னொரு குழு, தங்களை வேற்று கிரகவாசிகள் கடத்திச் சென்றதாகச் சொல்லும் நபர்கள். இந்த ஆய்வின்போது, சில குடும்பங்களில், குழந்தைகளின் DNA-வில் உள்ள சில பகுதிகள், அவங்க அப்பா, அம்மா ரெண்டு பேரோட DNA-வுடனும் பொருந்தாமல், முற்றிலும் புதிதாக இருந்ததைக் கண்டுபிடிச்சிருக்காங்க.
ஆனா, இது இன்னும் மற்ற விஞ்ஞானிகளால் முழுசா சரிபார்க்கப்படாத ஒரு ஆரம்பகட்ட ஆய்வுதான்னு அந்த ஆராய்ச்சியாளரே ஒப்புக்கொள்கிறார். “இன்னும் உறுதியான ஆதாரங்கள் இல்லை, எங்களுக்கு இன்னும் துல்லியமான தரவுகள் தேவை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வு இன்னும் ஒரு படி மேலே போய், ஆட்டிசம், ADHD போன்ற நரம்பியல் பன்முகத்தன்மை கொண்டவர்களிடம் இந்த ஏலியன் மரபணுக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் ஒரு கருத்தை முன்வைக்கிறது. ஆனால், இதுவும் ஒரு அனுமானம் மட்டுமே.
சரி, அறிவியல் இதற்கு என்ன சொல்கிறது?
“கிடைமட்ட மரபணு பரிமாற்றம்” (Horizontal Gene Transfer) என்ற ஒரு விஷயம் அறிவியலில் நிஜமாகவே இருக்கிறது. அதாவது, பெற்றோரிடமிருந்து அல்லாமல், சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற உயிரினங்களிடமிருந்து ஒரு உயிரினத்திற்கு மரபணுக்கள் கடத்தப்படுவது. இப்படி, நுண்ணுயிரிகளிடமிருந்து சுமார் 145 மரபணுக்கள் மனிதர்களுக்கு வந்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், நுண்ணுயிரிகளிடமிருந்து வருவது வேறு, வேற்று கிரகவாசிகளிடமிருந்து வருவது வேறு. இதுவரைக்கும், வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கோ, அவர்கள் மனிதர்களைக் கடத்தியதற்கோ எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை. நாசாவும் இதையேதான் சொல்கிறது.
ஒருவேளை, நம் பரிணாம வளர்ச்சியில் வேற்று கிரகவாசிகளுக்கும் ஒரு பங்கு இருக்குமோ? இது வெறும் கற்பனையா, இல்லை கண்டுபிடிக்கப்படாத உண்மையா? என்பதை அடுத்து வரும் ஆய்வுகள் தான் தெளிவுபடுத்தும்.