Saturday, May 10, 2025

சேப்பாக்கத்தில் ரெட்டை ‘தல’ சர்ப்ரைஸ் ‘விசிட்’ பின்னணி என்ன?

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டியை ‘தல’ அஜித் மனைவி, குழந்தைகளுடன் நேரில் சென்று ரசித்துள்ளார். அஜித்துடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ‘பராசக்தி’ தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரும் போட்டியை கண்டு களித்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகிறது. பொதுவாக அஜித் கிரிக்கெட் போட்டிகளை நேரில் சென்று பார்ப்பது கிடையாது. அப்படியிருக்க திடீரென அவர் CSK மேட்சை பார்க்க வந்தது, பல்வேறு யூகங்களையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

அஜித்-ஷாலினி தம்பதியர் ஏப்ரல் 25ம் தேதி, தங்களது 25வது திருமண நாளை கொண்டாடினர். மனைவி ஷாலினி தீவிர CSK ரசிகை என்பதால், அவருக்காக அஜித் சேப்பாக்கம் மைதானத்தில் என்ட்ரி கொடுத்ததாகத் தெரிகிறது.

அத்துடன் அஜித்தின் அடுத்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க நடிகரும், இயக்குனருமான தனுஷ் அப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எப்படியோ தல தோனி மற்றும் தல அஜித் என ரெட்டை ‘தல’களை ஒரே இடத்தில் தரிசித்த புண்ணியம் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அஜித்தை LED ஸ்க்ரீனில் காட்ட ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்து அலறியது. அப்போது மைதானத்தில் ஒலித்த அந்த சத்தம், சுமார் 150 டெசிபலுக்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news